அம்மாப்பேட்டை:-
அம்மாப்பேட்டை அருகே ஆடு மேய்க்கச்சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதரில் கிடந்த பெண் பிணம்
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்த பெண், தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகே உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச்சென்ற அந்த பெண் மாலையில் வீடு திரும்பவில்லை. தங்கள் மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன அந்த பெண்ணின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தங்களது மகளை தேடிப்பார்த்தனர். அப்போது இரவு 7 மணி அளவில் வடவாறு கீழ்கரையில் உள்ள ஒரு புதரில் அந்த பெண் காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணமாக கிடந்த அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தகவல் அறிந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் வடவாற்று கரையில் கிடந்த மீன் பிடிக்கும் தூண்டில் கம்பியை கைப்பற்றினர்.
பாலியல் பலாத்காரம் செய்து கொலை
இதுதொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி(28) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
பெரியசாமியும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(25) என்பவரும் வடவாற்றில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது வடவாற்று கரையில் அந்த பெண் தனியாக ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததை பார்த்துள்ளனர். உடனே அவர்கள், அந்த பெண்ணை அந்த பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு தூக்கிச்சென்று உள்ளனர். பின்னர் பெரியசாமியும், ராஜேசும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இந்த தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
2 பேர் கைது
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆடுமேய்க்கச்சென்ற பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.