கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி


கர்நாடகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை - மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2021 2:34 AM IST (Updated: 27 Oct 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை உருவாகாமல் இருப்பதுடன், டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:
  
  பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

ஆய்வறிக்கை வந்த பின்பு தான்...

  இங்கிலாந்து, ரஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்திலும் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரசின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வறிக்கை வந்த பிறகு தான் அந்த புதிய வைரசின் தாக்கம் பற்றி தெரியவரும்.இந்த புதிய வைரஸ் குறித்து மாநிலத்தில் உள்ள 6 ஆய்வகங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

  கர்நாடகத்தில் இந்த புதிய வைரசால் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் குழுவிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினர்களுடன் இந்த புதிய வைரஸ் குறித்து ஆலோசனை நடத்திய பின்பு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடனும் ஆலோசிக்கப்படும். அதே நேரத்தில் இந்த வைரஸ் கர்நாடகத்தில் பரவுதை தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்கொள்ள அரசு தயார்

  கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பவர்களுக்கு, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்பு சக்தி இருக்கும். என்றாலும், இந்த புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ், தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பவர்களுக்கும், எந்த மாதிரியான எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதை ஆய்வின் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டு இருப்பவர்களுக்கு பெரிய அளவில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  தற்போது இங்கிலாந்து, ரஷியா நாடுகளில் பரவி வரும் புதிய டெல்டா பிளஸ் வைரஸ், நமது நாட்டுக்கும் வந்துள்ளது. இதனால் 3-வது அலை உருவாக வாய்ப்புள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதை தடுப்பதுடன், அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், 3-வது அலை உருகாமல் தடுத்து விடலாம். கொரோனா 3-வது அலை வந்தாலும், அதனை எதிர் கொள்ள அரசு தயாராக உள்ளது.
  இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story