2 ஜவுளி கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை


2 ஜவுளி கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை
x
தினத்தந்தி 27 Oct 2021 3:17 AM IST (Updated: 27 Oct 2021 3:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 2 ஜவுளிக்கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 2 ஜவுளிக்கடைகளில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
2 ஜவுளிக்கடைகள்
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குமரி மாவட்ட மக்கள் ஜவுளி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதனால் நாகர்கோவில் மாநகர் உள்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.
நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில்  ஒரு பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே கடையின் உரிமையாளருக்கு சொந்தமான மற்றொரு கடையும் உள்ளது.
திடீர் சோதனை
இந்த நிலையில் நேற்று காலை ஜவுளி கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டன. அந்த கடைகளுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென வந்தனர். அவர்கள் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். நாகர்கோவில் மற்றும் நெல்லையில் இருந்தும் வந்திருந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் வரை தொடர்ந்தது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து நேற்று 2 கடைகளிலும் விற்பனை நடைபெறவில்லை. இதுதெரியாமல் ஜவுளி எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கடைக்குள் இருந்த ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளியில் இருந்தும் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அந்த கடைகளில் உள்ள இருப்பு விவரங்கள், விற்பனை விவரம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்த 2 ஜவுளிக் கடைகளிலும் நடந்த இந்த சோதனை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story