‘தினத்தந்தி‘ புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 28 Oct 2021 6:00 AM IST (Updated: 27 Oct 2021 4:27 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாராட்டை அள்ளும் மாநகராட்சியின் நடவடிக்கை

சென்னை திருவல்லிக்கேணி இருசப்ப கிராமணி தெருவில் சாலையோரம் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கியிருக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குப்பைகள் அகற்றப்பட்டு அந்த இடமே சுத்தமாக மாறி போயிருக்கிறது. மேலும் அப்பகுதியில் அழுக்கு படிந்து கிடந்த சுவர்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, அங்கு இயற்கை ஓவியங்கள் வரையப்பட்டு, அந்த இடமே அழகாக மாறியிருக்கிறது. குப்பைகளை அள்ளியதின் மூலமாக அப்பகுதி மக்களின் பாராட்டையும் மாநகராட்சி அள்ளியிருக்கிறது.   

போக்குவரத்துக்கு இடையூறு


சென்னை கொளத்தூர் பாலகுமரன் நகர் 2-வது மெயின் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்பு சாலையை விட உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை போக்க சம்பந்தப்பட்ட அந்த பாதாள சாக்கடை கட்டமைப்பு சாலை எல்லைக்கு சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

- பொதுமக்கள், பாலகுமரன் நகர்.

காட்சி பொருளான அடிபம்பு



சென்னை அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டம் 5-வது மெயின் தெருவில் உள்ள அடி பம்பு கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி காட்சி பொருளாகவே இருக்கிறது. இந்த அடிபம்பு சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் அத்தெருமக்களின் அலைச்சல் குறையும். நிம்மதியும் கிடைக்கும்.

- நண்பர்கள் குழு தோட்டம் மற்றும் அண்ணா பொது நல சங்கம்.  

கழிவுநீர் பிரச்சினையால் அவதி


சென்னை கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவில் அருகே நீண்டநாட்களாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக அமைந்துள்ளது. அருகே கோவில் இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இது பெரிய இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
- பொதுமக்கள், கொருக்குப்பேட்டை.

அபாயகரமான மின் இணைப்பு பெட்டி


சென்னை தியாகராயநகர் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மின் இணைப்பு பெட்டி கதவு பெயர்ந்த நிலையில் அபாயகரமாக காட்சி தருகிறது. மழைக்காலம் என்பதால் தேவையில்லாத அசம்பாவிதம் நடைபெறும் முன்பு இந்த மின் இணைப்பு பெட்டியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-பொதுமக்கள், தியாகராயநகர். 

எரியாத தெருவிளக்கால் மக்கள் சிரமம்

சென்னையை அடுத்த மாடம்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட மாருதிநகர் 5-வது தெருவில் தெருவிளக்கு எரியாத நிலையில் இருக்கிறது. பல தடவை புகார் அளித்தும் இந்த தெருவிளக்கு எரியவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். மாலை மற்றும் இரவு வேளைகளில் பொதுமக்கள் வெளியே நடமாட தயங்குகிறார்கள்.
- பொதுமக்கள், மாருதிநகர். 

மேற்கூரை சீரமைக்கப்படுமா?


சென்னை அண்ணாசாலை சிம்சன் பஸ் நிறுத்தத்தில் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நிழற்கூரை பெயர்ந்து காணாமல் போயிருக்கிறது. இதனால் உட்கார வசதி இருந்தும் வெயிலிலும், மழையிலும் பயணிகள் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இப்பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள மேற்கூரை சீரமைக்கப்படுமா?

- பொதுமக்கள், சிம்சன். 

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை

சென்னை தியாகராயநகர் 113-வது வார்டில் உள்ள பார்த்தசாரதிபுரம் 1, 2, 3-வது தெருக்களில் எங்குமே மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெருக்களில் விழும் மழைநீர் அனைத்தும் வீணாகிறது. இந்தத் தெருக்களின் ஓரங்களில் மழை நீர் சேகரிப்பை உருவாக்கினால் பெருமளவில் மழை நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டும் உயரும்.

- தி.பாலசங்கர், பார்த்தசாரதிபுரம். 

முகம் சுழிக்கும் பயணிகள்


சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடைபாதைகளிலும், இருக்கைகளிலும் பலர் படுத்துக்கொண்டு ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இதனால் பயணிகள் முகம் சுழித்தபடியே நடந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நடைபாதைகளில் ஆக்கிரமித்து இருப்பவர்களை அகற்றினால் பஸ் நிலையம் இன்னும் பொலிவை அடையும். இதற்கு உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுப்பார்களா?

- லட்சுமணன், சென்னை. 

பராமரிப்பில்லா உடற்பயிற்சி கூடம்

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் உள்ள அம்மா உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றியும், பாதுகாப்பின்றியும் இருக்கிறது. இந்த உடற்பயிற்சி கூடத்தை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

- பொதுமக்கள், செம்பரம்பாக்கம். 

தார்ச்சாலை போடுவது எப்போது?

செங்கல்பட்டு மாவட்டம் சூராடி மங்கலம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அங்கமாம்பட்டு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக ஜல்லி மட்டுமே கொட்டி வைத்திருக்கிறார்கள். தார்ச்சாலை போடுவதற்கான எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவே இல்லை.

- பொதுமக்கள். சூராடிமங்கலம். 

கழிவுநீர் கால்வாய் அமையுமா?

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நந்தம்பாக்கம் கிராமத்தில் கழிவுநீர் செல்வதற்கான கான்கிரீட் வடிகால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும்.

- பொதுமக்கள், நந்தம்பாக்கம். 

Next Story