தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.
ஒத்திகை நிகழ்ச்சி
தமிழகம் முழுவதும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை இயக்குநர் கரன்சின்கா உத்தரவின் பேரில் தென்மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் ஆலோசனையின் படி வருவாய்த்துறையினருடன் இணைந்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
பயிற்சி
நிகழ்ச்சியில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் முறைகள், தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையின் மீட்பு உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மீட்பு உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
விபத்து இன்றி
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறும் போது, பேரிடர் வந்தால் எப்படி மக்களை மீட்பது என்பது தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் வடகிழக்கு பருவ மழையின் போது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீபாவளி நேரத்தில் விபத்து இல்லாமல் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் முத்துபாண்டியன், தி.மு.க. மாணவர் அணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story