தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 27 Oct 2021 1:35 PM GMT (Updated: 2021-10-27T19:05:56+05:30)

போடியில் பெண்ணை வெட்டிக்கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி:

பெண் வெட்டிக்கொலை

தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் செல்வம் (வயது 35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெரியபாண்டி என்பவருடைய மகள் உமாவை கேலி செய்தார்.

இந்த விவரம் பெரியபாண்டியின் தம்பியும், கூலித்தொழிலாளியுமான மாரியப்பனுக்கு (51) தெரியவந்தது. இதனையடுத்து செல்வத்தின் வீட்டுக்கு மாரியப்பன் சென்று, தனது அண்ணன் மகளை கேலி செய்ததை கண்டித்து தகராறு செய்தார். 

அப்போது அவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் செல்வத்தை வெட்ட முயன்றார். அதை தடுக்க முயன்ற செல்வத்தின் தாய் மீனாட்சிக்கு (55) அரிவாள் வெட்டு விழுந்தது. 

இதில் அவர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மேலும் செல்வத்தையும் அவர் அரிவாளால் வெட்டினார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மீனாட்சி உயிரிழந்தார்.


ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து செல்வத்தின் தம்பி காவேரி ராஜா போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் வெள்ளைச்சாமி, சுகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சாந்தி செழியன் நேற்று தீர்ப்பு கூறினார்.

வழக்கில் கைதான மாரியப்பனுக்கு, மீனாட்சியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், செல்வத்தை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து தண்டனை பெற்ற மாரியப்பனை பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story