தொடர் மழையால் அழுகிய மலர்கள்
ஊட்டி ரோஜா பூங்காவில் தொடர் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டி ரோஜா பூங்காவில் தொடர் மழையால் மலர்கள் அழுகி வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
12 ஆயிரம் பூந்தொட்டி
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்குக்கு பிறகு 2-வது சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.
ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் ஒரே நாளில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 11,000 பேர் வருகை தந்தனர். சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
செடிகள் அகற்றம்
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கி நின்று அழுகி வருகின்றன. அழுகிய மலர் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு நர்சரியில் இருந்து பிற பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.
மேலும் நடைபாதை ஓரம், மலர் பாத்திகளில் நடவு செய்த செடிகளில் மழை காரணமாக மலர்கள் அழுக தொடங்கி உள்ளது. இதனால் பூங்கா நுழைவுவாயில் இருபுறமும் நடவு செய்யப்பட்ட மேரிகோல்டு மலர் செடிகள் அகற்றப்பட்டது.
மலர்கள் அழுகின
ஊட்டி ரோஜா பூங்காவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கின. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தற்போது தொடர் மழையால் ரோஜா மலர்கள் கீழே உதிர்ந்து விழுந்து வருகின்றன. மேலும் செடிகளில் மலர்கள் அழுகி இருப்பதை காணமுடிகிறது. இதனால் பல செடிகளில் மலர்கள் இன்றி வெறுமையாக காட்சி அளிக்கிறது.
களை இழந்தது
இதனால் 2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி இருப்பதால் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இருப்பினும் பசுமையான புல்வெளிகள், அலங்கார வேலிகள் அருகே புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். தற்போது தொடர் மழையால் 2 பூங்காக்களிலும் மலர்கள் அழுகி வருவதால் 2-வது சீசன் களை இழந்து உள்ளது.
Related Tags :
Next Story