தூத்துக்குடியில் பேரிடர் மீட்புக்குழுவை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூத்துக்குடியில் பேரிடர் மீட்புக்குழுவை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 27 Oct 2021 2:49 PM GMT (Updated: 2021-10-27T20:19:43+05:30)

தூத்துக்குடியில் பேரிடர் மீட்புக்குழுவை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால், வெள்ளம் மற்றும் புயல் வந்தால் ஆபத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை காப்பாற்றும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் கால மீட்புக்கு பயன்படக்கூடிய மீட்பு உபகரணங்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்பதையும், மாநில பேரிடர் மீட்பு படை பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் உள்ளனரா என்பது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று மாவட்ட போலீஸ் அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து ஆய்வு செய்தார். தொடர்ந்து அனைத்து உபகரணங்களையும் பார்வையிட்டு தயார் நிலையில் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் தாழ்வான பகுதிகள், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டு உள்ளன. இது குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு கொடுத்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. எந்த வித வெள்ளம் வந்தாலும் உடனடியாக மக்களை காப்பாற்றுவதற்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.


Next Story