கொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு
தேனி அருகே தட்சிணாமூர்த்தி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருடைய கூட்டாளியை தேடி வருகின்றனர்.
தேனி:
ஐம்பொன் சிலைகள் கொள்ளை
தேனி அருகே அரண்மனைப்புதூர் முல்லைநகரில் வேதபுரி சித்பவாநந்த ஆசிரமத்துக்கு பாத்தியப்பட்ட தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இந்த கோவில் பின்புறம் உள்ள கண்ணாடியை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த தாயுமானவர், மாணிக்கவாசகர், வியாசர், சனகர், சனதனர், சனந்தர், சனந்தகுமாரர், நந்தி, பலிபீடம் ஆகிய 9 ஐம்பொன் சிலைகளையும், பித்தளை உண்டியலையும் அதில் இருந்த பணத்துடன் கொள்ளையடித்தனர்.
நாற்றுப்பண்ணைக்குள் கண்டெடுப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவில் சுற்றுச்சுவருக்கு வெளியே வனத்துறை நாற்றுப்பண்ணைக்குள் போலீசார் தேடிய போது அங்கு வியாசர் சிலையும், பலிபீடமும் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை கொள்ளையர்கள் அங்கேயே வீசிச் சென்றது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு இரும்பு கம்பியும், ரூ.190-ம் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, ஆசிரமத்தின் மேலாளர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமீனில் வந்த வாலிபர்
கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பால்சுதிர், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக், சுந்தரலிங்கம், ராமபாண்டியன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 24) என்பவர் ஏற்கனவே சிலை கடத்தல் வழக்கில் சிக்கி இருப்பதும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அவர் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது.
7 சிலைகள் மீட்பு
இதையடுத்து ஸ்ரீதரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், தானும், தனது பள்ளிப்பருவ நண்பரான பெரியகுளம் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (23) என்பவரும் சேர்ந்து சிலைகளையும், உண்டியலையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் உண்டியலை முல்லைப்பெரியாற்றில் வீசிவிட்டு, சிலைகளை பெரியகுளம் அருகே கும்பக்கரையில் இருந்து அடுக்கம் செல்லும் மலைப்பாதையில் உள்ள புதருக்குள் மறைத்து வைத்துள்ளதாகவும் ஸ்ரீதர் தெரிவித்தார்.
அதன்பேரில் கும்பக்கரைக்கு போலீசார் விரைந்தனர். அங்கு புதருக்குள் கிடந்த 7 சிலைகளையும் போலீசார் மீட்டனர்.
கைது-தலைமறைவு
கொள்ளையடித்த சிலைகளை மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்று பதுக்கி வைத்ததாகவும் ஸ்ரீதர் கூறினார். இதையடுத்து இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அவருடைய கூட்டாளி கார்த்திக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்து, அனைத்து சிலைகளையும் போலீசார் மீட்டனர்.
சிலைகளை மீட்டு, கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
==============
(பாக்ஸ்) கைதான வாலிபருக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு?
தேனி அருகே முல்லைநகர் தட்சிணாமூர்த்தி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொள்ளைபோன 9 சிலைகளின் மொத்த எடை 212 கிலோ. அவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.20 லட்சம். கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன.
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரித்த போது, இந்த வழக்கில் கைதான ஸ்ரீதர் மீது தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சிலை கடத்தல் வழக்கு பதிவாகி இருந்தது தெரியவந்தது. அவர் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பான ஒரு வழக்கில் சிறையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்த போது, கொள்ளையடித்ததை போலீசாரிடம் ஒப்பு கொண்டார்.
ஸ்ரீதர் மீது திருப்பூர் மாவட்டம் அனுப்பூர் பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, தென்கரை, பெரியகுளம் பகுதிகளில் திருட்டு, அடிதடி வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் உள்ளன.
அவருடைய கூட்டாளியான கார்த்திக் மீதும் திருட்டு, அடிதடி சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதான ஸ்ரீதரிடம் விசாரித்த போது கோவிலில் பணம், நகை திருட சென்றதாகவும், சிலைகளை பார்த்ததும் ஆசை வந்து கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளார்.
இருப்பினும் ஏற்கனவே அவர் மீது சிலை கடத்தல் வழக்கு உள்ளதால், இந்த சிலைகளை கடத்தி விற்பனை செய்ய திட்டமிட்டாரா? ஏதேனும் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்காக அவரை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story