திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
தூத்துக்குடி:
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவில் நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கந்தசஷ்டி விழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழாவை நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 6-ம் நாளான வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 7-ம் நாளாள 10-ந் தேதி (புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் இந்த 2 நாட்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் விழாவின்போது பல்வேறு பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பக்தர்கள் கோவில் பகுதியில் தங்குவார்கள். விடுதிகளிலும் பேக்கேஜ் முறையில் ஒருவார காலத்துக்கு விடுதிகளை பதிவு செய்தும், மடங்களிலும் தங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் கோவில் மற்றும் வளாக பகுதிகளில் தங்க அனுமதி கிடையாது. திருச்செந்தூரில் உள்ள விடுதிகள், மடங்கள் மற்றும் மண்டபங்களில் பேக்கேஜ் முறையில் முன்பதிவு செய்து தங்குவதற்கும் அனுமதி இல்லை.
தினமும் 10 ஆயிரம் பேர்
சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் நாட்களை தவிர மற்ற நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவர்களும், 50 சதவீதம் நேரில் வருபவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி அளிக்கப்படும்.
பக்தர்கள் கோவில் பிரகார பகுதியில் விரதம் இருக்கவோ, அங்கபிரதட்சணம் செய்யவோ அனுமதி இல்லை. இந்த ஆண்டு தனியார் அமைப்புகள் அன்னதானம் வழங்கவும் அனுமதி கிடையாது. ்கோவில் நிர்வாகத்தின் மூலம் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.
1,500 போலீசார் பாதுகாப்பு
கோவிலுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? என்பதும் உறுதி செய்யப்படும். மேலும் கோவில் வளாகத்தில் 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையமும் செயல்படும். விருப்பம் உள்ளவர்கள் அந்த மையத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி விழா கொண்டாடப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) குமரதுரை, உதவி ஆணையர் வெங்கடேஷ், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story