விழுப்புரத்தில் நகை வியாபாரியிடம் ரூ.33 லட்சம் தங்கம் மோசடி அண்ணன், தம்பி கைது


விழுப்புரத்தில் நகை வியாபாரியிடம் ரூ.33 லட்சம் தங்கம் மோசடி அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 4:39 PM GMT (Updated: 27 Oct 2021 4:39 PM GMT)

விழுப்புரத்தில் நகை வியாபாரியிடம் ரூ.33 லட்சம் தங்கம் மோசடி செய்ததாக, அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கமலா நகரில் உள்ள கைவல்லி தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் சுரேஷ்(வயது 47). நகை வியாபாரி. இவருக்கு விழுப்புரம் டவுன் விராட்டிக்குப்பம் ரோடு பழனி லிங்கனார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முரளி(32) என்பவர் கடந்த 1½ ஆண்டுகளாக நகை செய்து கொடுத்து வந்துள்ளார்.

இவர், சுரேசிடம் இருந்து தங்கத்தை வாங்கி, அதில் ஜிமிக்கி போன்ற நகைகைளை செய்து கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில், முரளி சுரேசுக்கு 125 கிராம்.120 மில்லி சுத்த தங்கம் கொடுக்க வேண்டி இருந்தது. 
கடத்தி சென்றுவிட்டனர்

இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 12-ந்தேதி சுரேசின் வீட்டுக்கு சென்றார்.  அங்கு, 547கிராம் 380மில்லி சுத்த தங்கம் வாங்கி கொண்டு, அதில் ஜிமிக்கி டப்ஸ் செய்து தருவதாக கூறியுள்ளார். 

 ஆனால் சொன்னபடி, முரளி நகையை செய்து கொடுக்கவில்லை. இதையடுத்து சுரேஷ், முரளியின் வீட்டுக்கு  நகை என்ன ஆனது என்பது குறித்து கேட்க சென்றார்.

 அப்போது, அங்கிருந்தவர்கள் முரளியை யாரோ 2 பேர் கடத்தி சென்றுவிட்டனர். அவரை மீட்டு வருவதற்காக, முரளியின் தம்பியான கார்த்திக்(30)  வீட்டில் இருந்த 500 கிராம் தங்கத்தை கொடுத்து மீட்டுவந்ததாக தெரிவித்துள்ளனர். 

போலீசில் புகார் செய்ய வேண்டாம்

மேலும் தன்னிடம் இருந்து பெற்ற நகைகள் குறித்து சுரேஷ் கேட்ட போது, முரளி, கார்த்திக், முரளியின் மனைவி யோகலட்சுமி, முரளியின் தந்தை கோவிந்தராஜ் ஆகியோர் சேர்ந்து ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். 

மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், தன் மாமியார் வீட்டில் சொத்து கொடுத்தவுடன் தங்கத்தை திருப்பி தந்துவிடுவதாக முரளி சுரேசிடம் தெரிவித்துள்ளார். நகையின்  மொத்த மதிப்பு ரூ. 33 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடத்தல் நாடகம்

இதற்கிடையே, சுரேசுக்கு முரளியின் செயல்பாடு நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. இதனால் சுதாரித்துக்கொண்ட அவர், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் முரளி, கார்த்திக் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேர் மீதும்  சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் சுரேசிடம் இருந்து பெற்ற நகையை மோசடி செய்வதற்காக, தன்னை ஒருவர் கடத்தி விட்டதாக கூறி முரளி நாடகமாடி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முரளி, கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story