தனுஷ்கோடி பகுதியில் சூடை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன


தனுஷ்கோடி பகுதியில் சூடை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன
x
தினத்தந்தி 27 Oct 2021 5:00 PM GMT (Updated: 27 Oct 2021 5:00 PM GMT)

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் தனுஷ்கோடி பகுதியில் சூடை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. எதிர்பார்த்த விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமேசுவரம்,

வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் தனுஷ்கோடி பகுதியில் சூடை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. எதிர்பார்த்த விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சூடை மீன்கள் அதிகரிப்பு

ராமேசுவரம் அருகே புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதி உள்ளது. அது போல் புயலால் அழிந்த  தனுஷ்கோடி பாலம், கம்பிப்பாடு, எம்.ஆர் சத்திரம் ஆகிய பகுதிகளில் இன்று வரையிலும் மீன்பிடி தொழிலை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் பைபர் படகு ஒன்றில் 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலை கரை திரும்பினர்.கரை திரும்பிய மீனவர்கள் வலையில் சூடை மீன் 1 டன் வரை கிடைத்ததாக கூறப்படுகின்றது. எதிர்பார்த்ததை விட அதிக மீன்கள் கிடைத்தும் சரியான விலை கிடைக்காததால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஒரு கிலோ ரூ.17-க்கு விற்பனை

இது பற்றி தனுஷ்கோடி மீனவர் சின்னத்தம்பி கூறியதாவது:-
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்து சூடை மீன் சீசனும் தொடங்கி விடும். ஜனவரி மாதம் வரை சூடை மீன்கள் சீசனாகும். அதுபோல் இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கிய நிலையில் தனுஷ்கோடி கடலில் சூடை மீன் சீசனும் தொடங்கியுள்ளது. இன்னும் 3 மாதத்திற்கு சூடை மீன்களுக்காகவே தனி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்வோம்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடாக இருந்ததால் சூடை மீன் 1 கிலோ ரூ.100 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு சீசன் தொடங்கி 1 வாரம் ஆன நிலையிலும் அதிக அளவில் சூடை மீன்கள் கிடைத்தும் 1 கிலோ வெறும் ரூ.17-க்கு மட்டும் தான் விலை போகின்றன. இந்த ஆண்டு சூடை மீன்கள் மிகவும் குறைந்த அளவிலான விலை போவதாலும் கடும் டீசல் விலை உயர்வாலும் அதிகமான நஷ்டம் தான் ஏற்பட்டு வருகின்றது. ஆகவே மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உற்பத்தி விலையிலேயே மீனவர்களுக்கு டீசல் வழங்கவும், சூடை மீனகளுக்கும் நல்ல விலை கிடைக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.இவ்வாறு அவர் கூறினார். மீனவர்களால் பிடித்து கொண்டு வரப்படும் சூடை மீன்கள் தூத்துக்குடியில் உள்ள கம்பெனிக்கு ஆயில் தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story