சங்கராபுரம் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து மேலும் 2 பேர் உடல் கருகி சாவு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
சங்கராபுரம் பட்டாசு கடையில் நடந்த தீ விபத்தில் மேலும் 2 பேர் உடல் கருகி உயிாிழந்தனா். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்துள்ளது
சங்கராபுரம்
பட்டாசு கடை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பு கள்ளக்குறிச்சி மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வகணபதி. பா.ஜனதா மாவட்ட செயலாளரான இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது மளிகை கடையுடன் சேர்த்து பட்டாசு கடையும் நடத்தி வந்தார். மேலும் அந்த கடையின் மாடியில் உள்ள குடோனில் பட்டாசுகளை வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் தீ அருகில் உள்ள இனிப்பு கடை, ஜவுளிக்கடைக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் கண் இமைக்கும் நேரத்தில் இனிப்பு கடையில் இருந்த சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியது. இதனால் வானுயரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்து, அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
5 பேர் பலி
இந்த கோர விபத்தில் செல்வகணபதியின் தாய் வள்ளி (வயது 65) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த சங்கராபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ் மகன் ஷாஆலம் என்கிற லட்டு(26), ஜகாங்கீர் மகன் காலித்(23), குளத்து பாதை தெருவை சேர்ந்த பஷீர்(72), சைக்கிளில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், சங்கராபுரம் தமிழ்படைப்பாளர் சங்க தலைவருமான செம்பியன் என்கிற அய்யாசாமி(65) ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் படுகாயமடைந்த சங்கராபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாசர்(45) உள்பட 12 பேர் கள்ளக்குறிச்சி, சென்னை, சேலம் மற்றும் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2-வது நாளாக மீட்பு பணி
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நாசர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மின்தடை மற்றும் இனிப்பு கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது.
அப்போது கட்டிடத்தின் இடிபாடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியபோது உடல் கருகிய நிலையில் சிறுவன் உடலின் ஒரு பகுதியை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த சிறுவனின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
அப்போது பட்டாசு கடையில் இருந்து 70 அடி தூரத்தில் உள்ள சேதமடைந்த மளிகை கடையின் இடிபாடுகளில் கருகிய நிலையில் சிறுவனின் உடல் கிடந்தது. இதை பாா்த்த தீயணைப்பு வீரா்கள் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பலியான சிறுவன் செல்வகணபதியின் தம்பி முருகனின் மகன் தனபால்(11) என்பது தெரியவந்தது. இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
தடய அறிவியல் நிபுணர் ஆய்வு
இந்த நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை தடய அறிவியல் இணை இயக்குனர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் கிடைத்த தடயங்களையும் சேகரித்தார்.
பின்னர் இந்த விபத்து குறித்து அவர் கூறும்போது, பொதுவாக அனுமதி பெற்று விற்பனை செய்யக்கூடிய பட்டாசுகளும் உள்ளது. அனுமதியின்றி மறைமுகமாக பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடிய முறைகளும் உள்ளது. எனவே கிடைத்த தடயங்களின் மாதிரிகளை சென்னையில் உள்ள தடய அறிவியல் இயக்குனருக்கு அனுப்பி வைத்து, அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளபட்டால் மட்டுமே இதனுடைய உண்மை நிலவரம் என்ன என்று தெரியும் என்றார்.
Related Tags :
Next Story