ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது பிரச்சினைக்கு தீர்வு காண சிந்திப்போம்-சிறப்போம் திட்டம்


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது பிரச்சினைக்கு தீர்வு காண சிந்திப்போம்-சிறப்போம் திட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 5:40 PM GMT (Updated: 2021-10-27T23:10:06+05:30)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது பிரச்சினைக்கு தீர்வு காணவும், காவல் துறைக்கு பொதுமக்கள் யோசனை கூறவும் சிந்திப்போம்- சிறப்போம் என்ற புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது பிரச்சினைக்கு தீர்வு காணவும், காவல் துறைக்கு பொதுமக்கள் யோசனை கூறவும் சிந்திப்போம்- சிறப்போம் என்ற புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் அறிமுகம் செய்து வைத்தார்.

சிந்திப்போம்-சிறப்போம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், அதற்கு தீர்வு காணும் வகையிலும், சமூக காவல் நடைமுறையை மேம்படுத்தவும் சிந்திப்போம்- சிறப்போம் என்ற புதிய திட்டம் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.

தமிழகத்திலேயே முதன் முதலாக செயல் படுத்தப் பட்டுள்ள இந்த திட்டம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீர்வுகாண

சமூகத்தில் அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், குற்றங்கள், சூதாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை, விபத்து, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைத் திருமணம், போக்குவரத்து நெரிசல், சாராயம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு, மூத்த குடிமக்கள் நலன், மற்றும் சமூகத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிந்திக்கவும், அதற்கு தீர்வு காண அவர்களை ஊக்குவிக்கவும் சிந்திப்போம்-சிறப்போம் என்ற புதிய செயல்முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. 

போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள், யோசனைகள் வழங்கவும் அவர்கள் சமூகம் சார்ந்து சிந்திக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதின் மூலம் ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதோடு, சமூக சிந்தனையாளர்களை அங்கீகரிக்கவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து மூலமாக...

காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினை, அதற்குண்டான தீர்வு, அவர்கள் முன்வைக்கும் திட்டம் குறித்த விளக்கத்தினை எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், இத்திட்டத்திற்கான பொறுப்பு அலுவலரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் முகாம் உதவியாளருமான ஜீ.வி.சிலம்பரசனிடம் நேரடியாக வழங்கலாம். 
sprptcamp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் சந்தேகங்களுக்கு 7845457095 என்ற எண்ணில் அழைத்தும் உதவி பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்பட போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story