வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்


வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 27 Oct 2021 11:13 PM IST (Updated: 27 Oct 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

வேலூர்

வேலூரில் காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தந்தை புகார் மனு அளித்துள்ளார்.

பள்ளி மாணவி மாயம்

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய வாலிபர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி மாயமானார். 

அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்காததால் பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர்மீது தாக்குதல்

இந்தநிலையில் அந்த மாணவியை மெக்கானிக் அழைத்துச்சென்றதாக மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் அவர்கள் மாணவியை சென்னையில் இருந்து மீட்டு வந்தனர். இதையடுத்து அந்த வாலிபரை மாணவியின் தரப்பினர் சரமாரியாக தாக்கி, கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 
இதில் படுகாயமடைந்த அந்தவாலிபர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே அந்த வாலிபர் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தநிலையில் அந்த வாலிபரின் தந்தை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், பாகாயம் போலீசார் சரியாக புலன் விசாரணை செய்யாமல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உண்மை நிலை அறிந்து சட்டப்படி உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story