முதியவர்களிடம் ஏ.டி.எம்.கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருட்டு: கைதான 3 பேர் பற்றி பரபரப்பு தகவல்கள்
முதியவர்களிடம் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் மாற்றி பணம் திருடிய பீகார் மாநில வாலிபர்கள் 3 பேர் கைதானது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை:
ஏ.டி.எம். கார்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக வங்கி ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க வரும் வயதானவர்களை குறி வைத்து வங்கி ஏ.டி.எம். கார்டில் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து அவர்கள் கொண்டுவரும் ஏ.டி.எம்.கார்டை மாற்றி வேறு ஏ.டி.எம்.கார்டை கொடுத்து அவர்களது வங்கிகணக்கில் உள்ள பணத்தை திருடி செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. கடந்த 1-ந் தேதி அன்று புதுக்கோட்டை கீழ ராஐவீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற கண்ணன் (வயது 56) என்பவர் அவரது மாமியாரின் வங்கி ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.16 ஆயிரம் எடுத்துக்கொண்டு திரும்பும் போது அவரது ஏ.டி.எம். கார்டு கீழே விழுந்ததாகவும் அதை வடமாநிலத்தவர் எடுத்து கொடுத்ததாகவும் அதன் பிறகு தனது மாமியார் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்து 700-ஐ யாரோ எடுத்துள்ளனர்.
அப்போது தான் வங்கி ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டது தெரிந்துள்ளது. இதையடுத்து டவுன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
3 பேர் கைது
இந்த நிலையில் புதுக்கோட்டை நகரபகுதிகள் மற்றும் வங்கி ஏ.டி.எம். ஆகியவற்றில் உள்ள சுமார் 50 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதில் குற்றவாளிகளை கண்டறிந்து திருச்சி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பதுங்கி இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பெஹருலால் சஹானி (38), சுனில் சா (31), அரவிந்த் சஹானி (33) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 1 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரையும் திருமயம் கிளை சிறையில் அடைத்தனர். வட மாநிலத்தவர்களை கைது செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.
உதவுவது போல நடித்து...
இந்த நிலையில் கைதான 3 பேர் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க செல்லும் வயதான முதியவர்களை பார்த்து அவர்களுக்கு பணம் எடுத்து கொடுத்து உதவுவது போல அவர்களது ஏ.டி.எம். கார்டை பெற்று ரகசிய குறியீடு எண்ணை அறிந்து கொண்டு, பணத்தை எடுத்த பின் அவர்களது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக போலியான வேறொரு ஏ.டி.எம்.கார்டை மாற்றி கொடுத்துவிட்டு தங்களது கைவரிசையை காட்டி பணம் திருடி வந்துள்ளனர்.
இதுபோன்ற அறிமுகம் இல்லா நபர்களிடம் தங்களது வங்கி ஏ.டி.எம். கார்டை கொடுப்பது அவர்களிடம் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை பகிர்வது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story