போலி நகை அடமானம் வைத்து ரூ.2½ கோடி கடன் வழங்கி மோசடி


போலி நகை அடமானம் வைத்து ரூ.2½ கோடி கடன் வழங்கி மோசடி
x
தினத்தந்தி 27 Oct 2021 11:46 PM IST (Updated: 27 Oct 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடமானம் பெற்று ரூ.2½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இது ெதாடர்பாக வங்கி மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆரணி

ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடமானம் பெற்று ரூ.2½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. இது ெதாடர்பாக வங்கி மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கூட்டுறவு வங்கி 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. தச்சூர் செல்லும் சாலையில் உள்ள இந்த வங்கி பழம்பெரும் வங்கியாகும்.

வங்கியின் தலைவராக அ.தி.மு.க. நகர செயலாளர் அசோக்குமார் பதவி வகித்து வருகிறார். வங்கியின் பொதுமேலாளராக லிங்கப்பன், காசாளராக ஜெகதீசன், உதவி அலுவலராக சரவணன் உள்பட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். 

இந்த நகர கூட்டுறவு வங்கியில் நகை கடன் அதிக அளவில் வழங்கப்பட்டு இருந்தது. 

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைகளை கொடுத்து கடன் பெற்றிருந்தால் அதனை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்த நிலையில் இவ்வாறு நகை கடன்கள் அதிக அளவில் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

நகைகள் ஆய்வு

இதனையொட்டி கடந்த 2 மாதங்களாக திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களின் கீழ்இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகளிலும் வேலூர் மண்டலத்திலிருந்து வந்திருந்த கூட்டுறவு அலுவலர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், மேலாளர்கள் நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்ததில் போலி நகைகள் அடமானம்பெற்று ரூ.2 கோடியே 51 லட்சம் முறைகேடாக கடன் வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் க.ராஜ்குமார் கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 4 ஆயிரத்து 537 பொது கடன்கள் ரூ.29கோடியே 12 லட்சம் வழங்கப்பட்டு நிலுவையாக இருந்துள்ளது. 

இவ்வாறு கடன் பெற்றவர்கள் வைத்த நகைகள் கடந்த 21-ந் தேதி சரி பார்க்கப்பட்டன, அப்போது 77 பேர் அடகு வைத்த நகைகள் போலியானதாகவும் தரம் குறைவானதாகவும் உள்ளது. 

இவர்களுக்கு வங்கியின் மூலம் ரூ, 2 கோடியே 39 லட்சம் அளவில் முறைகேடாக நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. 

78 கிராம் நகை அடகு வைத்தால் கடன் அட்டையில் 165 கிராம் நகை அடகுவைக்கப்பட்டதாக பதிவு செய்து ஒருவருக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 77 பேர் உள்பட மொத்தம் 82 பேருக்கு முறைகேடாக 2 கோடியே 51 லட்சம் வரை கடன் வழங்கியுள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆரணி நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், உதவி அலுவலர் சரவணன் ஆகிய 3 பேர் பணியிைட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் சங்க தலைவராக இருந்த அசோக்குமார் 6 மாத காலத்திற்கு பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

நிர்வாக குழு கலைப்பு

கடன் வழங்கிய காலத்தின்போது ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனராக இருந்த ஜி.கல்யாணகுமார் பணியிட மாற்றம் செய்து அவருக்கு பதில் தற்போது கூட்டுறவு சார் பதிவாளர் ரமேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் ஆரணி நகர கூட்டுறவு வங்கி நிர்வாக குழு கூண்டோடு கலைக்கப் படுகிறது.
இவ்வாறு திருவண்ணாமலை மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் க. ராஜ்குமார் அறிவித்துள்ளார்.

வங்கியில் குவியும் கூட்டம்

முறைகேடாக கடன் வழங்கி மோசடி நடந்திருப்பதை அறிந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பலரும் வங்கியில் தனது பெயரில் வைக்கப்பட்டுள்ள நகை உண்மையானதா இருக்கிறதா என அலுவலர்களிடம் கேட்டு வருகின்றனர். 
இதனால் வங்கியில் பெரும் பரபரப்பாக உள்ளது.

Next Story