நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்


நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்
x
தினத்தந்தி 27 Oct 2021 7:47 PM GMT (Updated: 27 Oct 2021 7:47 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த குறுகிய காலக்கெடுவே உள்ளதால் நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று 8 மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.

திருச்சி, அக்.28-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த குறுகிய காலக்கெடுவே உள்ளதால் நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று 8 மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி திருச்சி கலையரங்கில் நேற்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:-
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்திடும் வகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் தொடர்பு அலுவலர்கள் அனைவரும் தேர்தல் குறித்த விதிகள் மற்றும் நடவடிக்கைகள் முழுமையாக அறிந்து பணியாற்ற வேண்டும். தேர்தலை பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்பு, தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தொடர்புடைய முக்கிய பணிகள் உள்ளது.
உச்சநீதிமன்றம் 4 மாத காலத்துக்குள் தேர்தலை நடத்த ஆணையிட்டுள்ளது. ஆகவே குறைவான காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். வரும் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனை வைத்து கொண்டு நவம்பர் 25-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். அதற்கு இடைப்பட்ட நாட்களுக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும். மேலும், மண்டலம் வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. குறுகிய காலமே இருப்பதால் சவாலான இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
8 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்பு
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் சிவராசு (திருச்சி), கவிதா ராமு (புதுக்கோட்டை), ரமண சரஸ்வதி  (அரியலூர்), ஸ்ரீவெங்கடபிரியா (பெரம்பலூர்), அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சை), காயத்ரிகிருஷ்ணன் (திருவாரூர்), லலிதா (மயிலாடுதுறை), மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர்கள் முஜிபுர்ரகுமான் (திருச்சி), சரவணக்குமார் (தஞ்சை) மற்றும் 8 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story