தஞ்சையில் டி.டி.வி.தினகரன்- ஓ.பன்னீர்செல்வம் தம்பி திடீர் சந்திப்பால் பரபரப்பு


தஞ்சையில் டி.டி.வி.தினகரன்- ஓ.பன்னீர்செல்வம் தம்பி திடீர் சந்திப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 28 Oct 2021 1:32 AM IST (Updated: 28 Oct 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவும் திடீரென சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:-

தஞ்சையில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவும் திடீரென சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமண வரவேற்பு

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாத துளசிஐயா வாண்டையாருக்கும் கடந்த மாதம் 16-ந் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடந்தது. இதையடுத்து தஞ்சையை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சசிகலா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் தம்பி பங்கேற்பு

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவரும், டி.டி.வி.தினகரனும் மேடையிலேயே தனியாக நின்று சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து ஓ.ராஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஏற்கனவே அ.தி.மு.க.வில் சசிகலா சேர்த்து கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், தலைமைக்கழக நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார். இந்த பதில் அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், முனுசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து இருந்தனர். சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா நேற்று டி.டி.வி. தினகரன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதும், இருவரும் தனியாக சந்தித்து பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story