பெட்ரோல் விலை ரூ.105-ஐ தாண்டியது


பெட்ரோல் விலை ரூ.105-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 27 Oct 2021 8:07 PM GMT (Updated: 27 Oct 2021 8:07 PM GMT)

திருச்சியில் பெட்ரோல் விலை ரூ.105-ஐ தாண்டியது. டீசல் லிட்டர் ரூ.101-க்கு விற்பனையானது.

திருச்சி, அக்.28-
திருச்சியில் பெட்ரோல் விலை ரூ.105-ஐ தாண்டியது. டீசல் லிட்டர் ரூ.101-க்கு விற்பனையானது.
தினமும் ஒரு விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தினமும் எகிறியபடியே உள்ளது. இந்த விலை உயர்வு நிர்ணயம் செய்வதை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்கிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் திருச்சியில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டியது.
லிட்டர் ரூ.105 ஆனது
நேற்று முன்தினம் (26-ந் தேதி) திருச்சியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 104 ரூபாய் 92 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 105 ரூபாய் 23 காசுகளாக உயர்ந்தது.
டீசல் லிட்டர் ஒன்றுக்கு நேற்று முன்தினம் 100 ரூபாய் 98 காசுகளாக இருந்தது. நேற்று 37 பைசா அதிகரித்து, ஒரு லிட்டர் டீசல் 101 ரூபாய் 35 காசுகளாக உயர்ந்தது. இந்த மாதத்தில் கடந்த 1-ந் தேதி முதல் இதுவரை (4,18,19 மற்றும் 26-ந் தேதி தவிர) 22 நாட்கள் விலையேற்றப்பட்டுள்ளது.
வாடகை கட்டணம் உயர்வு
பெட்ரொல், டீசல் விலையேற்றத்தால் லாரி வாடகை கட்டணம், ஆட்டோ சவாரி கட்டணமும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் வீடுகளில் பலகாரங்கள், இனிப்பு வகைகள் செய்வதற்கு எண்ணெய் மற்றும் சர்க்கரை அதிக அளவில் பயன்படுத்துவது வழக்கம். தற்போது அவைகளின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
மக்கள் கொந்தளிப்பு
மேலும் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலையும் ரூ.1000-த்தை எட்டி விட்டது. எரிபொருள் விலையேற்றம் எகிறிகொண்டே செல்வதை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாமல் இருப்பதும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களான மராட்டியம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.110, ரூ. 115 என உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story