சூரமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் வாலிபர் பிணம்-கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
சூரமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூரமங்கலம்:
சூரமங்கலத்தில் சாக்கடை கால்வாயில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் பிணம்
சேலம் 3 ரோடு ஜவகர் மில் பகுதியில் திருவகவுண்டனூர் ரவுண்டானா அருகில் சாக்கடை கால்வாயில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடந்தது. தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அந்த உடல் மீது கல் ஒன்று கிடந்தது. உடனே போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்தவர், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே காஞ்சனாகுடியை சேர்ந்த சம்சுதீன் என்பது தெரியவந்தது.
மளிகை கடையில் வேலை
இவருக்கு திருமணமாகி ஈசாமா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். சம்சுதீனின் உறவினர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளனர்.
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அந்த மளிகை கடையில் சம்சுதீன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது வேலை பார்த்த பணத்தை கொண்டு மது அருந்துவதும், பின்னர் கடையின் வாசலில் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளார்.
கொலையா?
இதற்கிடையே சம்சுதீன் சாக்கடை கால்வாயில் எப்படி பிணமாக கிடந்தார் என்பது தெரியவில்லை. அவர் மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது சும்சுதீனிடம் இருந்த பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்தனரா என்பது தெரியவில்லை.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story