சேலத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற கைதி தப்பி ஓட்டம்-போலீசார் துரத்தி சென்று பிடித்ததால் பரபரப்பு
சேலத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பி ஓடிய கைதியை போலீசார் துரத்தி சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற போது தப்பி ஓடிய கைதியை போலீசார் துரத்தி சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொலை முயற்சி வழக்கு
சேலம் மாவட்டம் வீரகனூரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). வீரகனூர் பகுதியில் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் தலைவாசல் போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக ஆயுதப்படை போலீசார் சேலம் சிறையில் இருந்து கண்ணனை போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு சேலம் கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர் வேனை விட்டு அவரை போலீசார் இறக்கினர். அப்போது அவரது 2 கையையும் சேர்த்து விலங்கு போடப்பட்டு இருந்தது.
தப்பி ஓடினார்
இந்த நிலையில் விசாரணைக்கு செல்லாமல் திடீரென்று போலீசாரின் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடினார். அவரை அழைத்து சென்ற போலீசார் திடுக்கிட்டனர். பின்னர் சுதாரித்துக்கொண்ட போலீசார் சிறிது தூரம் துரத்தி சென்று கண்ணனை பிடித்து அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்ற கைதி தப்பி ஓட முயன்றதால் அந்த பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story