4 வழிச்சாலை அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
குமரி மாவட்டத்தில் நடைபெறும் 4 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடைபெறும் 4 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அதிகாரிகளுடன் கலந்தாய்வு
குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலககூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையிலான 64 கி.மீ. தூர 4 வழிச் சாலைப்பணிகளும், நாகர்கோவில் முதல் காவல்கிணறு வரையிலான 16 கி.மீ தூர 4 வழிச்சாலைப்பணிகளும் ரூ.2500 கோடி செலவில் 2017 - ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. காவல்கிணறு முதல் திருவனந்தபுரம் வரையிலான 4 வழிச்சாலை பணியானது கடந்த 10 ஆண்டு காலமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டு, பணிகள் முடியாத நிலை இருந்த சூழலில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மூன்று கட்டமாக துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
51 லட்சம் டன் மண் தேவை
நெடுஞ்சாலை பணி குறித்த ஆய்வில் சில இடர்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 4 வழிச்சாலை அமைப்பு பணிகளுக்காக சுமார் 51 லட்சம் டன் மண் தேவைப்படுகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து இந்த மண் எடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே அண்டை மாவட்டத்தில் இருந்து மண் எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்துப் பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் (2022) இந்த சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, மதுரை மண்டல அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) சிவாகி, மாவட்ட வருவாய் அதிகாரி (தேசிய நெடுஞ்சாலை) பஞ்சவர்ணம், திட்ட இயக்குனர் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) வேல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story