டி.ஜி.பி. விஸ்வநாதன் குமரி வருகை


டி.ஜி.பி. விஸ்வநாதன் குமரி வருகை
x
தினத்தந்தி 28 Oct 2021 5:00 AM IST (Updated: 28 Oct 2021 5:00 AM IST)
t-max-icont-min-icon

காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று குமரி வந்தார். அவர் போலீஸ் நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கான கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்:
காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று குமரி வந்தார். அவர் போலீஸ் நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கான கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
போலீஸ் டி.ஜி.பி. ஆய்வு
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் நேற்று காலை குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்த அவரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் குமரி மாவட்டத்தில் காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வரும் போலீஸ் நிலையங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
முதலில் கொற்றிக்கோடு பகுதியில் கொற்றிக்கோடு போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதன்பிறகு இரணியல் போலீஸ் நிலையம் அருகில் மதுவிலக்கு பிரிவுக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம் மற்றும் போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட உள்ள இடத்தையும், குளச்சல் போலீஸ் நிலையம் அருகில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலக கட்டிடம் மற்றும் போலீஸ் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
புதிய கட்டிடங்கள்
பின்னர் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையம் அருகில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவுக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்தார். மறவன்குடியிருப்பு ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் போலீஸ் குடியிருப்புக்கான இடத்தையும் பார்வையிட்டார். 
அதன்பிறகு கோட்டார் இளங்கடையில் கே.டி.சி.சி. காலனியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட இருக்கும் இடத்தையும் அவர் ஆய்வு செய்தார். மாலையில் அவர் கன்னியாகுமரிக்கு சென்று அங்கு கட்டப்பட உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து அவர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கூடுதல் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டுகள் நவீன்குமார் (நாகர்கோவில்), கணேசன் (தக்கலை), தங்கராமன் (குளச்சல்), ராஜா (கன்னியாகுமரி), சாம் வேதமாணிக்கம் (ஆயுதப்படை), தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story