வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
கேரள வனப்பகுதியில் இருந்து கூடலூருக்கு திரும்பிய காட்டுயானைகள் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்
கேரள வனப்பகுதியில் இருந்து கூடலூருக்கு திரும்பிய காட்டுயானைகள் வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மீண்டும் கூடலூருக்கு வருகை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, நாடுகாணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்டுயானை கூட்டம் ஒன்று முகாமிட்டு அட்டகாசம் செய்தது. இதை தடுக்க பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் வனத்துறையினர் கும்கி யானைகளை கொண்டு வந்து காட்டுயானை கூட்டத்தை கேரள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து கூடலூர் வனத்துக்குள் நேற்று முன்தினம் அந்த காட்டுயானை கூட்டம் மீண்டும் நுழைந்தது. எனினும் ஊருக்குள் வராமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வீடுகள் சேதம்
ஆனால் நள்ளிரவில் புளியம்பாரா பகுதியில் நுழைந்த காட்டுயானை கூட்டம், வீரம்மா(வயது 55) என்பவரது வீட்டை உடைத்தது. இதனால் பீதி அடைந்த அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் காட்டுயானை கூட்டத்தை விரட்டியடித்தனர்.
தொடர்ந்து பாடந்தொரை அருகே உள்ள ஆலவயல் பகுதிக்குள் நுழைந்த காட்டுயானை கூட்டம், ரமா என்பவரது வீட்டை இடித்தது. அப்போது வீட்டுக்குள் இருந்த அவர் உள்பட 4 பேர் பயத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து பின்வாசல் வழியாக வெளியே ஓடி உயிர் தப்பினர்.
எச்சரிக்கை
இதற்கிடையில் வீட்டில் இருந்த 60 கிலோ அரிசியை காட்டுயானை கூட்டம் தின்றுவிட்டு சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்து அவர்கள் பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த வீடுகளை சீரமைக்க இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கேரள வனப்பகுதிக்கு சென்ற காட்டுயானை கூட்டம் மீண்டும் வந்து உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.
Related Tags :
Next Story