மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்


மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2021 7:39 PM IST (Updated: 28 Oct 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து கூடலூரில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கூடலூர்

மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து கூடலூரில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் அங்கு இயங்கி வரும் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை கூடலூருக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை கூடலூருக்கு மாற்றினால், உரிய நேரத்தில் தரமான சிகிச்சை பெற முடியும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி குன்னூருக்கு மாற்றப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்தது. இது கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

உண்ணாவிரத போராட்டம்

இதை கண்டித்து கூடலூர் காந்தி திடலில் நேற்று காலை 9 மணிக்கு எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை குன்னூருக்கு மாற்றியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான், ஒன்றிய செயலாளர் பத்மநாதன் மற்றும் பா.ஜ.க, நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் கூறியதாவது:-
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு 52 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து நோயாளிகள், கர்ப்பிணிகள் அவசர காலங்களில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த கால ஆட்சியில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியை கூடலூரில் அமைக்க முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

உயர் அதிகாரிகளுக்கு மனு

இந்த நிலையில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி குன்னூரில் அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. கூடலூரில் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story