பெகாசஸ் உளவு விவகாரத்தில் விசாரணை குழு - எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு
பெகாசஸ் உளவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விசாரணை குழு அமைத்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
நெல்லை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய கல்வி கொள்கை
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் ரூ.200 கோடி செலவில் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இல்லம் தேடி கல்வி திட்டம், மத்திய பாரதீய ஜனதா அரசின் புதிய கல்வி கொள்கையின் ஒரு அம்சமாகவே உள்ளது. இந்த முறைசாரா கல்வி திட்டத்தை கைவிட வேண்டும்.
இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க வேண்டும்.
வரவேற்கத்தக்கது
பெகாசஸ் உளவு விவகாரத்தில் 4 பேர் கொண்ட விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பெகாசஸ் விவகாரத்தில், கவனத்தை திசை திருப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் உச்சநீதிமன்றத்தால் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
நெல்லை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளால் தூசி பறக்கும் நகரமாக மாறி விட்டது. எனவே, திட்டமிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story