14 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள்
தீபாவளியையொட்டி, தேனி மாவட்டத்தில் 14 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி:
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்காக கடந்த சில நாட்களாக கடைவீதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக வர தொடங்கியுள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், தேனி, போடி, உத்தமபாளையம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் மொத்தம் 14 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோபுரங்களில் நின்றபடி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தேனி நகரில் பகவதியம்மன் கோவில் தெருவின் நுழைவு பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து திருடர்கள் நடமாட்டத்தை கண்காணித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்குதல் போன்ற பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருடர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மக்களோடு மக்களாக சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் மாவட்டத்தில் ஏற்கனவே 72 மோட்டார் சைக்கிள் ரோந்து படையினர் கடை வீதிகள், குடியிருப்புகளில் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.
தற்போது கூடுதலாக 49 மோட்டார் சைக்கிள் ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸ் அதிகாரிகள் ரோந்து செல்லும் ஜீப்களின் எண்ணிக்கை 29-ல் இருந்து 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடைவீதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுமார் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story