அரசு ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு
செய்யாறு அருகே அரசு ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறித்து சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியரிடம் வழிப்பறி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29), வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் சதீஷ் மோட்டார் சைக்கிளில் செய்யாறு நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென சதீசை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்க சங்கிலி, செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சதீஷ் கொடுத்த தகவலின் பேரில் அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படியான நபர்கள் எச்சூர் கிராமத்தில் 2 நாட்களாக தங்கி இருப்பது தெரியவந்தது. வீட்டிற்கு வெளியே அவர்கள் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை பார்த்த சதீஷ் மர்ம நபர்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிள் இதுதான் என உறுதி படுத்தியதால் அனக்காவூர் போலீசார் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
5 பேர் கைது
விசாரணையில் சதீஷிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும், வந்தவாசி தாலுகா தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (21), சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (20), லோகேஷ் (20), ராகுல் (21) என்பதும், அவர்கள் தங்குவதற்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்த சந்தான கோபால கிருஷ்ணன் (22) என்பதும் தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் சென்னை ஆவடியில் உள்ள தொழிற்சாலையில் தினக்கூலிகளாக வேலை செய்வதும், 2 நாட்களுக்கு முன்பு எச்சூரில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் வீட்டில் வந்து தங்கி நோட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, மோட்டார் சைக்கிள், 3 கத்தி, தங்க சங்கிலி, பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story