சூலூர் அருகே குளிக்க சென்றபோது 3 மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலி
சூலூர் அருகே குளிக்க சென்றபோது 3 மாணவர்கள் குட்டையில் மூழ்கி பலி
கருமத்தம்பட்டி
சூலூர் அருகே குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி 3 மாணவர் கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவர்கள்
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சி முதலிபாளையத்தை சேர்ந்தவர் அன்பு. இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 14). இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் அதேப்பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படித்து வந்த சுரேஷ் என்பவர் மகன் சபரிவாசன் (11), 8-ம் வகுப்பு படித்து வந்த ஆறுச்சாமி மகன் பூபதி (14) ஆகியோருடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.
தற்போது கொரோனா காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.
வீடு திரும்பவில்லை
இதன் காரணமாக சதீஷ்குமார், சபரிவாசன், பூபதி ஆகியோர் ஆன் லைனில் படித்து வந்ததுடன், அடிக்கடி வெளியே சென்று விளையாடி வந்தனர். இந்த நிலையில் வீட்டில் விளையாட செல்கிறோம் என்று கூறிவிட்டு 3 பேரும் விளையாட சென்றனர்.
ஆனால் மதியம் ஆகியும் 3 பேரும் வீட்டிற்கு சாப்பிடவரவில்லை. இதனால் 3 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவர்கள் வழக்கமாக விளையாடும் இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அங்கு அவர்கள் கிடைக்கவில்லை.
குட்டையில் தேடினார்கள்
எனவே உறவினர்கள் 3 பேரையும் பல இடங்களில் தேடினார்கள். அப்போது அங்குள்ள கிணத்துக்காட்டு குட்டை அருகே சென்று தேடியபோது அந்த குட்டையின் ஓரத்தில் 3 பேரின் ஆடைகளும் கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ஊர் பொதுமக்கள் உதவியுடன் அந்த குட்டைக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது சேறும் சகதியுமாக கிடந்த குட்டைக்குள் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் கிடந்தன.
3 பேர் பலி
தற்போது பெய்த மழையில் அந்த குட்டை முழுவதும் நிரம்பியதும், அதில் குளிக்க சென்றபோது 3 பேரும் சேறும் சகதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலிபாளையத்தில் குளிக்க சென்றபோது குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story