தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
பொது கழிவறை கட்டிடம் சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு பஞ்சாயத்து பகுதியில் சின்னபெருந்தோட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக பொது கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கழிவறை கட்டிடம் பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் பொது கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறை கட்டிடத்தில் இருந்து விஷப்பூச்சிகள் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி கிடக்கும் கழிவறை கட்டிடத்தை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-குபேந்திரன், திருவெண்காடு.
சேறும், சகதியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் முசிரியம் ஊராட்சி பகுதியில் திட்டாணிமுட்டம் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் சாலை பராமரிப்பின்றி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களில் நெல் மூட்டைகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், நெல் மூட்டைகளை கொண்டு வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-மதியழகன், திருவாரூர்.
சுகாதார சீர்கேடு
நாகை மாவட்டம் புதியஆரியநாட்டு தெரு சுனாமி குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி சாக்கடையாய் மாறிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள குப்பைத்தொட்டிகள் நிறைந்தும் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் சுனாமி குடியிருப்பு குப்பை மேடுபோல் காட்சி அளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுனாமி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-சிவக்குமார், நாகை.
சாலையை சீரமைக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த அந்தோணியார் கோவில் தெரு சாலை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கிவிடுகின்றன. மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சாலையில் தேங்கி கிடக்கும் நீரில் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் எற்படும் முன்பு சாலையில் குளம் போல் தேங்கி கிடக்கும் மழைநீரை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருவாரூர்.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா வெள்ளக்குடி காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையில் கழிவுநீர் தேங்கி கிடப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருவாரூர்.
Related Tags :
Next Story