வாலிபர் மர்மச்சாவில் திடீர் திருப்பம். பாறாங்கல்லை போட்டு கொலைசெய்தது அம்பலம்
அரக்கோணம் அருகே நடந்த வாலிபர் மர்மச்சாவில் திடீர்திருப்பமாக அவர் பாறாங்கல்லைபோட்டு கஒலைசெய்தது அம்பலமாகி உள்ளது.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே நடந்த வாலிபர் மர்மச்சாவில் திடீர்திருப்பமாக அவர் பாறாங்கல்லைபோட்டு கஒலைசெய்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மர்மச்சாவு
அரக்கோணத்தை அடுத்த அவினாசி கண்டிகையா சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண் (வயது 32). கடந்த சில தினங்களுக்கு முன் அங்குள்ள பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். மது போதையில் விழுந்து இறந்து இருப்பார் என எண்ணி குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்தனர்.
இந்தநிலையில் அருண் சாவில் சந்தேகம் அடைந்த அவரது தந்தை கோவிந்தராஜ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து, புதைக்கப்பட்ட அருண் உடலை அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ் ஆகியோர் முன்னிலையில் தோன்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாறாங்கல்லை போட்டு கொலை
பிரேத பரிசோதனை அறிக்கையில் அருண் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), ராமாபுரத்தை சேர்ந்த மாயாண்டி (39), அவினாசி கண்டிகையை சேர்ந்த தரணி (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அருணை கொலை செய்யதாத கூறி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சந்தோஷ் உள்பட 3 பேரும் சம்பவத்தன்று அவினாசி கண்டிகையில் உள்ள நீர்நிலையில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்து விட்டு காத்திருந்ததாகவும், அப்போது அங்கிருந்த அருணுக்கும், சந்தோசிற்கும் இடையே இருந்த நில பிரச்சினை முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் பாறாங்கல்லை எடுத்து அருண் மார்பு மீது போட்டதில் அருண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
3 பேர் கைது
போலீசாரிடம் இருந்து தப்பிக்க கல்லை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று புதர் மறைவில் போட்டு விட்டு சென்றுள்ளனர். பிடிபட்ட 3 பேரிடமிருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல்செய்யப்பட்டது. கொலைக்கு பயன்படுத்திய பாறாங்கல்லை போலீசார் கைப்பற்றினர். மேலும் 3 பேரையும் அரக்கோணம் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story