சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம்
உடுமலையில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நீதிபதி மணிகண்டன் தொடங்கிவைத்தார்.
உடுமலை
உடுமலையில் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை நீதிபதி மணிகண்டன் தொடங்கிவைத்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்கள்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழாவையொட்டி கடந்த 2-ந் தேதி முதல் ஆங்காங்கு சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளிகள், பஸ் நிலையம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட இடங்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் நீதிபதிகள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
வாகன பிரசாரம்
இதன் ஒருபகுதியாக சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக செய்தி மக்கள் தொடர்பு துறையின் வாகனத்தில் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளன. இந்த வாகனத்தின் மூலம், ஆங்காங்கு பொதுமக்கள் கூடும் இடங்களில் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.
உடுமலை கச்சேரி வீதியில் உள்ள சப்-கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்ட சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரான, உடுமலை சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உடுமலை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) எஸ்.ஆக்னல் ஜெயகிருபா, உடுமலை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) எஸ்.பாபு, வக்கீல்கள் சங்கத்தலைவர் ஶ்ரீதர் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சட்ட விழிப்புணர்வு குறித்து, தமிழ் நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் துண்டு பிரசுரங்கள் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.
மடத்துக்குளம்
இதைத்தொடர்ந்து மடத்துக்குளத்தில் நடந்த சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சியில் உடுமலை சப்-கோர்ட்டு நீதிபதி எம்.மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற (மடத்துக்குளம்) நீதிபதியான மடத்துக்குளம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் ஆர்.பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்ட விழிப்புணர்வு முகாம்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story