தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்


தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2021 12:33 AM IST (Updated: 29 Oct 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை பணியிடை நீக்கம் செய்து தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2 மாதங்களாக பயிர் கடன் கேட்டு விண்ணப்பித்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடன் கொடுக்கவில்லை என்றும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கடன் வழங்கி வருவதாக கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயிர் கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் வழங்க வலியுறுத்தியும், முறைகேடு செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் பண்ருட்டியில் போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

பணியிடை நீக்கம்

இந்நிலையில் நேற்று மதியம் காடாம்புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரகுவை பணியிடை நீக்கம் செய்து தலைவர் தேவநாதன் உத்தரவிட்டுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறிப்பாணை பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் கடலூர் சரக துணைப்பதிவாளருக்கு தகவல் அனுப்பி உள்ளார்.
கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கூட்டுறவு துறை ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story