காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து முன்னாள் எம்.எல்.ஏ. மனைவிக்கு ரூ.4 கோடி இடம் முறைகேடாக விற்பனை
காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து ரூ 4 கோடி மதிப்பிலான இடத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மனைவிக்கு விற்பனை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோட்டுச்சேரி, அக்.29-
காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மதிப்பிலான இடத்தை முன்னாள் எம்.எல்.ஏ. மனைவிக்கு விற்பனை செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.4 கோடி மதிப்பிலான இடம்
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அன்னவாசல் சாலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 65). இவரது சித்தப்பா குமார் கேசவன் பிரெஞ்சு குடியுரிமை பெற்று பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு காரைக்கால் மாதா கோவில் வீதியில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் வீட்டுமனை உள்ளது.
இந்த நிலையில் குமார் கேசவன், அவரது மனைவி சரஸ்வதி ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்களின் மகன் ஆனந்த் குமார் பரிந்துரையின் பேரில் குணசேகரன் பராமரித்து வருகிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ. மனைவிக்கு விற்பனை
குமார் கேசவன், சரஸ்வதி ஆகியோர் இறந்ததை அறிந்து, குமார் கேசவனின் உறவினரான நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியை சேர்ந்த தேவராஜ் மகன் ஆனந்த், காரைக்கால் முஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த கண்ணப்பன் மகன் செந்தில்குமார் என்கிற கட்டபொம்மன், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து காரைக்கால் பத்திரப் பதிவு அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பதிவு செய்துள்ளனர்.
பின்னர் அந்த இடத்தை முறைகேடாக காரைக்காலை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கணபதியின் மனைவி சாயிலட்சுமிக்கு 2018-ம் ஆண்டு விற்றுள்ளனர்.
3 பேர் மீது வழக்கு
இந்த மோசடியை அறிந்த குணசேகரன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் ஆனந்த், செந்தில்குமார் என்கிற கட்டபொம்மன், அவரது மனைவி ஆனந்தஜோதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செந்தில்குமார் மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story