மருமகள் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
விவசாயியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மருமகள் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு உத்தரவிட்டது.
திருச்சி
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள மணியாரம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 54). விவசாயி. இவரது மகன் வெங்கடேஷ் (29). இவருக்கும் எளமனம் சீத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் மகள் நாகலட்சுமிக்கும் கடந்த 2014-ம் ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. நாகலட்சுமி மணப்பாறை தபால் அலுவலகத்தில் அப்போது ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது சென்னையில் பணியாற்றுகிறார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே செல்வம் பெயரிலுள்ள 3 ஏக்கர் நிலத்தை மருமகள் நாகலட்சுமி பெயரில் எழுதிவைக்கக்கோரி அவரது உறவினர்களான மணியாரம்பட்டியை சேர்ந்த முகவூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வேலுச்சாமி, அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 10 பேர் கட்டாயப்படுத்தி உள்ளனர். நாகலட்சுமி பெயரில் நிலத்தை எழுதித் தரவில்லை என்றால், உங்கள் வீட்டில் வாழவிட மாட்டோம் என மிரட்டி இருக்கிறார்கள்.
ஊர்பஞ்சாயத்து
இதுதொடர்பாக பலமுறை ஊர் பெரியவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரவு 11 மணிக்கு வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக செல்வம் கொடுத்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் நாகலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் வேலுசாமி உள்ளிட்ட 10 பேரும் ஒன்று சேர்ந்து, மருமகள் நாகலட்சுமியை செல்வம் கையை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாக மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் நாகலட்சுமியை புகார் கொடுக்க செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து 3.2.2015 அன்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக போவதாக எழுதிகொடுத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளனர்.
தற்கொலை
அப்போது போலீஸ் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்த நாகலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் செல்வத்தை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு அவதூறாக திட்டினர். இதனால், மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்ட செல்வம் மறுநாள் (4.2.2015) வீட்டின் அருகில் உள்ள புடலங்காய் தோட்டத்தில் தனது சாவுக்கு மருமகள் உள்பட 10 பேர்தான் காரணம் எனக்கூறி கடிதம் எழுதிவிட்டு விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
அதன்பேரில், விவசாயி செல்வத்தை தற்கொலைக்கு தூண்டியதாக மருமகள் நாகலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் 10 பேர் மீது வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேருக்கு 10 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை முடித்து நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். விவசாயி செல்வத்தை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் மருமகள் நாகலட்சுமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வேலுச்சாமி, இவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மீதம் உள்ள 7 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை அரசு தரப்பில், கூடுதல் அரசு வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.
அதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட வேலுச்சாமி, கிருஷ்ணமூர்த்தி திருச்சி மத்திய சிறையிலும், நாகலட்சுமி திருச்சி பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story