போலீஸ் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 Oct 2021 1:47 AM IST (Updated: 29 Oct 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் ஐ.இ.எஸ்.எம். என்ற அமைப்பின் கீழ் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இறந்து போன ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் முன்னாள் ராணுவத்தினருக்குரிய சலுகைகள் பெறுவதற்கு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அலுவலகத்தை அணுகவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனரை அணுகியபோது, அவர் முன்னாள் படைவீரர்களை அலைக்கழித்து, தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் படை வீரர்கள் மீது அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தததாகவும் கூறப்படுகிறது.
அதன்பேரில் விசாரணை நடத்த சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் இறந்த படைவீரர்கள் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐ.இ.எஸ்.எம். அமைப்பின் தலைவர் சுந்தரய்யா, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வராததால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து முன்னாள் படை வீரர்கள் கூறுகையில், “உயிரை பணயம் வைத்து ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற எங்களுக்கு அரசு பல சலுகைகள் வழங்கி கவுரவம் செய்யும் நிலையில் மாவட்ட படைவீரர்கள் அலுவலக அதிகாரிகள் எங்களை அலைக்கழிப்பது வேதனையாக உள்ளது” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Next Story