நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை


நாட்டு துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Oct 2021 1:52 AM IST (Updated: 29 Oct 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே வாலிபர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாதகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பாலா என்ற பாலசுப்பிரமணி (வயது 19). இருசக்கர வாகன மெக்கானிக் ஆவார். பாலசுப்பிரமணி தனது நண்பரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கி வீட்டில் வைத்திருந்தார். இதனை அவரது தந்தை அழகர் கண்டித்தார்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணி அளவில் தந்தைக்கும்-மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தினர். அப்போது ஆத்திரத்தில் அழகர் தனது செல்போனை உடைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டில் உள்ள மற்றவர்களும் அன்று இரவு தூங்க சென்று விட்டனர். 
இந்நிலையில் அன்று இரவு சுமார் 9 மணியளவில் பாலசுப்பிரமணி அருகில் உள்ள புளியந்தோப்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடும்பத்தினர் அங்கு சென்று பிணமாக கிடந்த பாலசுப்பிரமணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை வீட்டுக்கு எடுத்து வந்தனர்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
 இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது உறவினர்கள் குடும்பத் தகராறில் பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாகவும், விபத்தில் இறந்து விட்டதாகவும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் பாலசுப்பிரமணியின் உடலை பார்வையிட்டபோது தாடை பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்தது. பின்னர் போலீசாா் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டபோது அங்கு பாலசுப்பிரமணி இறந்து கிடந்த புளியந்தோப்பில் நாட்டு துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், துப்பாக்கியை வீட்டில் வைக்கக்கூடாது, அதனை உரியவரிடம் கொடுத்து விடுமாறு மகனிடம் அழகர் கூறினார். அவர் தொடர்ந்து வீட்டில் வைத்திருக்கவே தந்தை-மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தோப்புக்கு சென்ற பாலசுப்பிரமணி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முரண்பட்ட தகவல்
பின்னர் பாலசுப்பிரமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
 இந்நிலையில் இறந்த பாலசுப்பிரமணியின் தந்தை தான், பாலசுப்பிரமணியை சுட்டு விட்டு தலைமறைவானதாக மற்றொரு தகவல் பரவியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தநிலையில் நடந்த சம்பவம் அறிந்து நேற்று அழகர் வீடு திரும்பினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், நண்பரிடம் இருந்து வாங்கி வந்த துப்பாக்கியை திரும்ப ஒப்படைக்குமாறு கூறினேன். ஆனால் பாலசுப்பிரமணி அதனை பொருட்படுத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்தான். இதுதொடர்பாக எனக்கும், அவனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். அதன்பிறகு பாலசுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அறிந்து வந்தேன் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story