எம்.எல்.ஏ. உறவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய முதியவர் அடித்து கொலை
பெலகாவி அருகே, எம்.எல்.ஏ.வின் உறவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
பெலகாவி:
எம்.எல்.ஏ.வின் உறவினர்
பெலகாவி மாவட்டம் கித்தூர் எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் மகாந்தேஷ் தொட்ட கவுடா. இவர் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் நேற்று மதியம் மகாந்தேஷ் எம்.எல்.ஏ.வின் உறவினர் ஒருவர் கித்தூர் டவுன் சவுகிமடா கிராசில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது ஒரு காருக்கு வழிவிட முதியவர் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் நடந்து சென்ற எம்.எல்.ஏ.வின் உறவினர் மீது மோதியது.
இதில் அவர் தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த முதியவரை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கித்தூர் போலீசார் அங்கு வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீடியோ வைரல்
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த முதியவர் கித்தூர் தாலுகா மல்லாபுரா கிராமத்தை சேர்ந்த விஜய் ஹிரேமத் (வயது 71) என்பதும், அவர் எம்.எல்.ஏ. மகாந்தேசின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் எதிர்பாராதவிதமாக எம்.எல்.ஏ. உறவினர் மீது மோட்டார் சைக்கிளால் மோதிய விஜயை, அப்பகுதியை சேர்ந்த சிலர் அடித்து கொன்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. உறவினர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளால் மோதுவதும், அவரை அப்பகுதியினர் அடித்து கொல்லும் காட்சிகளும் அப்பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
Related Tags :
Next Story