வடகர்நாடக மாவட்ட மக்களுக்கு நான் விரோதி இல்லை - தேவேகவுடா பேட்டி


வடகர்நாடக மாவட்ட மக்களுக்கு நான் விரோதி இல்லை - தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 29 Oct 2021 2:24 AM IST (Updated: 29 Oct 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன் என்றும், வடகர்நாடக மாவட்டங்களின் விரோத நான் இல்லை என்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

விஜயாப்புராவில் நேற்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நான் விரோதி இல்லை

  நான் வடகர்நாடக மாவட்டங்களின் விரோதி, லிங்காயத் சமுதாயத்திற்கு எதிரானவன் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை என் மீதும் சில தலைவர்கள் கூறி வருகிறார்கள். நான் வடகர்நாடக மாவட்டங்களின் விரோதி இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்த போது வடகர்நாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு வடகர்நாடக மாவட்டங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

  நான் முதல்-மந்திரியாக இருந்த போதும் சரி, பிரதமராக இருந்த போதும் சரி, அந்த மாவட்டங்களின் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். விவசாயிகள் பயன் அடைவதற்காக பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். அந்த நீர்ப்பாசன திட்டங்களால் தான் தற்போது அந்த மாவட்டங்களில் விவசாயிகள் எந்த பிரச்சினையும் இன்றி இருக்கிறார்கள்.

உள்ஒப்பந்தம் செய்யவில்லை

  லிங்காயத் சமுதாயத்தை நான் எப்போதும் எதிர்த்ததில்லை. அந்த சமுதாயத்திற்கு எதிரானவனும் இல்லை. எனது தலைமையிலான ஆட்சி நடந்த போது லிங்காயத், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அனைத்து சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்ததுடன், மந்திரி பதவியும் வழங்கினேன். இந்த வயதில் நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடவுளிடம் உண்மையை சொல்வேன். அதுபோல், மக்களிடமும் என்றுமே பொய் சொன்னது இல்லை.

  பா.ஜனதாவுடன் உள்ஒப்பந்தம் செய்து கொண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். யாருடனும் உள்ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. அதற்கான அவசியமும் எனது அரசியல் வாழ்க்கையில் வந்ததில்லை. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே பா.ஜனதாவின் பி அணி தான் ஜனதாதளம் (எஸ்) கட்சி என்று ராகுல்காந்தி கூறினார். தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரசுடன் தான் கூட்டணி அமைத்தோம். பா.ஜனதாவுடன் கூட்டணி சேரவில்லை. என் மீது கூறும் குற்றச்சாட்டுகளை பெரிதாக எடுத்து கொள்வதில்லை.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story