சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கேரள முன்னாள் மந்திரி மகனுக்கு ஜாமீன் - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதான கேரள முன்னாள் போலீஸ் மந்திரி மகனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு:
சட்டவிரோத பணபரிமாற்றம்
பெங்களூரு கல்யாண்நகரில் கடந்த 2020-ம் ஆண்டு போதைப்பொருள் விற்பனை செய்ததாக கன்னட திரைப்பட துணை நடிகை அனிகா, அவரது நண்பர் அனுப் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அனுப்பிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரளா, பெங்களூருவில் ஓட்டல் தொழில்களை நடத்தி வந்ததும், இதற்காக கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் செயலாளரும், முன்னாள் போலீஸ் மந்திரியுமான கொடியேறி பாலகிருஷ்ணாவின் மகன் பீனேஷ் கொடியேறி பணம் கொடுத்து உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். அப்போது அவருக்கு போதைப்பொருட்கள் விற்பனையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது.
ஜாமீன்
இதுகுறித்து அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கில் பீனேஷ் கொடியேறி கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உடல்நலக்குறைவை காரணம் காட்டி கர்நாடக ஐகோர்ட்டில் பீனேஷ் கொடியேறி ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை ஐகோர்ட்டு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் பீனேஷ் கொடியேறி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி எம்.ஜி.உமா முன்பு நடந்தது. விசாரணையின் முடிவில் பீனேஷ் கொடியேறிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story