கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகலில் நாளை வாக்குப்பதிவு
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பிரசாரம் ஓய்ந்தது
கர்நாடகத்தில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சிந்தகி தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மணகுலி மற்றும் ஹனகல் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்த சி.எம்.உதாசி மரணம் அடைந்திருந்ததால், அந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே 3 கட்சிகளின் தலைவர்களும் சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த தொகுதிகளுக்கான பகிரங்க பிரசாரம் 72 மணிநேரத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றிருந்தது.
வீடு, வீடாக சென்று பிரசாரம்
அந்த 2 தொகுதிகளிலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். பகிரங்க பிரசாரம் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவுடன் அனைத்து தலைவர்களும் தொகுதிகளில் இருந்து வெளியேறி இருந்தனர்.
ஆனாலும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேட்பாளர்களுக்கு, தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, நேற்று 3 கட்சிகளின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் வீடு, வீடாக சென்று தங்களது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்கள்.
நாளை ஓட்டுப்பதிவு
இந்த நிலையில், சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 2 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. கொரோனா காரணமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுப்போடும் முன்பாக வாக்காளர்கள் கையில் கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கொரோனா விதிமுறைகள் அனைத்தும் வாக்குப்பதிவு மையங்களில் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என்று விஜயாப்புரா மற்றும் ஹாவேரி மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஓட்டுப்போடுவதற்காக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்பாடுகள் தயார்
சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் சிந்தகி தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 309 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 949 பேர் ஆண்களும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 327 பேர் பெண்களும், 33 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
இதுபோல், ஹனகல் தொகுதியில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 206 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 405 பேர் ஆண்கள் ஆவார்கள். 98 ஆயிரத்து 798 பேர் பெண்களும், 3 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுவதால், 2 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் கர்நாடக ஆயுதப்படை, விஜயாப்புரா, ஹாவேரி நகர ஆயுதப்படை மற்றும் அந்தந்த மாவட்ட போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த 2 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story