சேலம் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பெண் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
விபசார வழக்கு
ஆத்தூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். கடந்த செப்டம்பர் மாதம் அவரை விபசார வழக்கில் பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து பிரதாப்பை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளி விஜி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பழனிசாமி, விஜி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து பழனிசாமி, விஜி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல்
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவரை கடந்த சில நாட்களுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கடந்த செப்டம்பர் மாதம் சங்ககிரி போலீசார் கைது செய்தனர். தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட அவரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து அரவிந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story