தந்தை கண் எதிரே பரிதாபம்: மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பலி
சேலையூர் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரேயே என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப். சாலை, இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 50). இவருடைய மனைவி ரமணி(45). இவர்களுடைய மகன் ஸ்ரீதர் (21). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், தற்போது மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படித்து வந்தார்.
நேற்று காலை ரமணி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்துக்கு சென்றுவிட்டு, தாம்பரம் ெரயில் நிலையம் வந்தார். அவரை அழைத்துச்செல்ல ஸ்ரீதர் மற்றும் சுப்புராஜ் இருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனங்களில் வீட்டில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையம் புறப்பட்டனர்.
தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சேலையூர் அருகே வந்தபோது திருவான்மியூரில் இருந்து கிழக்கு தாம்பரம் நோக்கி வந்த மாநகர பஸ்(தடம் எண்:95) ஸ்ரீதரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஸ்ரீதரின் தலையில் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் ஸ்ரீதர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தந்தையின் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். மகனின் உடலை பார்த்து சுப்புராஜ் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான திருவான்மியூரைச் சேர்ந்த ஜீவரத்தினம் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூரைச் சேர்ந்தவர் ஆரோன் (50). இவர், தாம்பரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தாம்பரம்-தர்காஸ் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மினி லோடு ஆட்டோ மோதியதில் அதே இடத்தில் ஆரோன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி லோடு ஆட்டோ டிரைவரான விருதாச்சலத்தைச் சேர்ந்த வேல்முருகன் (22) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story