ரூ.3 லட்சம் மண்ணை திருடி சாலை அமைப்பு; ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது மூதாட்டி கண்ணீர் புகார்
தனக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மண்ணை திருடி தனது நிலத்திலேயே சாலை அமைத்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது மூதாட்டி புகார் செய்ததால் அந்த பணிக்கான பணம் வழங்குவதை ஆர்.டி.ஓ. சத்யா நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கோணசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்த நாயுடு. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சியாமளம்மாள் (வயது 70). இவர் தனது பேத்தி உஷா (25) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சியாமளம்மாவிற்கு சொந்தமான நிலத்தில் அனுமந்த நாயுடு உயிருடன் இருக்கும்போது கிணறு வெட்டினார். தண்ணீர் வராததால் கிணறையும் மூட வசதி இல்லாமல் அந்த மண்ணை தனது நிலத்திலேயே விட்டுவிட்டார்.
ரூ.3 லட்சம் மதிப்பிலான அந்த மண்ணை தற்போது கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் தங்கம்மாள் என்பவருடைய கணவர் கோவிந்தசாமி இரவோடு இரவாக திருடி தனது நிலத்திலேயே மண் சாலை அமைத்ததாக சியாமளம்மாள் பொதட்டூர்பேட்டை போலீசில் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் நேற்று பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவை சந்தித்து மனு அளித்தார். மனு அளிக்கும் போது ஆண் ஆதரவற்ற தங்களுக்கு நியாயம் கிடைக்க ஆர்.டி.ஓ. விடம் கண்ணீர் விட்டு அழுதபடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து கோணசமுத்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட மண் சாலை பணிக்கு பணம் வழங்குவதை ஆர்.டி.ஓ. சத்யா நிறுத்தி வைத்தார்.
Related Tags :
Next Story