‘தினத்தந்தி‘ புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதாள சாக்கடை உடனடி சீரமைப்பு
சென்னை ராயபுரம் பழைய வண்ணாரப்பேட்டை பாலு தெருவில் மூடியில்லாத கழிவுநீர் கால்வாய் குறித்த செய்தி, தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அந்த பாதாள சாக்கடை உடனடியாக சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்து உள்ளனர்.
தெரு பலகைக்கு கிடைத்தது அடையாளம்
சென்னை மேற்கு மாம்பலம் மேற்கு கவரை தெரு பகுதியில் உள்ள தெரு பலகையில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டு தெருவின் பெயரே காணாமல் போயிருந்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதனைத்தொடர்ந்து அந்த பலகையில் தெருவின் பெயர் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
இடையூறாக இருந்த மின்கம்பம் அகற்றம்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் ஊராட்சி வஞ்சுவாஞ்சேரி அண்ணாசாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் இருக்கும் செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு உள்ளது. மின்வாரிய அதிகாரிகளின் இந்த உடனடி நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் அதேவேளை அகற்றப்பட்ட அந்த மின்கம்பம் அப்படியே சாலையில் போடப்பட்டிருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
பாதசாரிகளுக்கு இடையூறாக கிடக்கும் கம்பம்
சென்னை மந்தவெளிப்பாக்கம் டிரஸ்ட் கிராஸ் தெருவில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் கம்பம் ஒன்று போடப்பட்டுள்ளது. இது பாதசாரிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. கேட்பாரற்று கிடக்கும் இந்த கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், மந்தவெளிபாக்கம்.
மழைநீர் கால்வாய் சரிசெய்யப்படுமா?
சென்னை பழைய பல்லாவரம் ஆர்.கே.வி. அவென்யூ. 6 வது மற்றும் 7-வது தெருக்களின் சந்திப்பில் உள்ள மழைநீர் கால்வாய் செடிகொடிகள் சூழ்ந்த புதராக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல தடை ஏற்பட்டு, சாலையில் மழைநீர் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது.
- பொதுமக்கள், பழைய பல்லாவரம்
பழுதடைந்த மின் பெட்டி
சென்னை அம்பத்தூர் அத்திப்பேடு வானகரம் மெயின் ரோட்டில் உள்ள பில்லர் பாக்ஸ் மின் பெட்டி பழுதடைந்து இருக்கிறது. மின்வயர்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கின்றன. மழைக்காலத்தின்போது இப்பகுதியில் தண்ணீர் தேங்கும் என்பதால், உடனடியாக இந்த பில்லர் பாக்ஸ் மாற்றப்பட வேண்டும்.
- பொதுமக்கள், அம்பத்தூர்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
சென்னை அசோக்நகர் மேம்பாலம் கீழே (காசி தியேட்டர் அருகே) சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.
- நிஷாந்தி, அசோக்நகர்.
எரியாத மின்விளக்கு
சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் ஏரிக்கரை தெருவில் மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு இல்லை. தற்போது தெருவில் உள்ள மின்விளக்கும் எரியாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே எரியாத தெருவிளக்கை எரிய செய்வதுடன், உரிய மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பத்மா, கார்த்திகேயபுரம்.
பாதாள சாக்கடை மூடி உடைந்தது
சென்னை குரோம்பேட்டை நாகல்கேனி சிவசங்கர் நகர் திருநீர்மலை மெயின் ரோட்டில் நடைபாதையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து போயிருக்கிறது. சிறுவர்கள், முதியோர் இந்த வழியாக செல்லும்போது மிகவும் ஜாக்கிரதையுடனே செல்ல வேண்டியதுள்ளது.
- பொதுமக்கள், குரோம்பேட்டை.
சாலையில் ராட்சத பள்ளங்கள்
சென்னை அம்பத்தூர் விவேகானந்தா நகர் கனகாம்பரம் தெருவில் சாலையில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும் இப்பகுதியில் முறையான மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் கட்டமைப்பும் ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
- ஆர்.ஜனனி, அம்பத்தூர்.
நாய்களால் மிரளும் வாகன ஓட்டிகள்
சென்னை குரோம்பேட்டை நேரு நகர் வரதராஜன் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாகவே இருக்கிறது. பாதசாரிகளையும், இருசக்கர வாகனத்தில் செல்வோரையும் நாய்கள் துரத்தி கடித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிரண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடித்து வருபவர்களை நாய்கள் படாதபாடு படுத்தி விடுகின்றன.
- பொதுமக்கள், வரதராஜன் தெரு.
முட்புதர் சூழ்ந்த பொது கழிப்பறை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள பொது கழிப்பறை முட்புதர்களால் சூழப்பட்டு பயன்பாடு இல்லாமலேயே கிடக்கிறது. இந்த முட்புதர்களை அகற்றி பொது கழிப்பறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் விருப்பமாக இருக்கிறது.
- பொதுமக்கள், அச்சிறுப்பாக்கம்.
நின்று செல்லாத பஸ்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட சேர்க்காடு பஸ் நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்கின்றன. ஆனால் தாம்பரத்தில் இருந்து வாலாஜாபாத் வரை இயக்கப்படும் 579ஏ, 579சி பஸ்கள் மட்டும் நின்று செல்வதே கிடையாது. இதுகுறித்து போக்குவரத்துத்துறைக்கு பலதடவை புகார் அனுப்பியும் பலன் இல்லை.
- எம்.பாரதி, சேர்க்காடு.
Related Tags :
Next Story