சிறப்பு ஊக்கத்தொகை வழங்ககோரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்


சிறப்பு ஊக்கத்தொகை வழங்ககோரி டாக்டர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2021 11:13 AM IST (Updated: 29 Oct 2021 11:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு டாக்டர்களுக்காக அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் அரசாணையை உடனடியாக அமல்படுத்தக்கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் பதவி ஏற்றவுடன், கொரோனா காலகட்டத்தில் நன்றாக பணிபுரிந்த டாக்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறப்பு படிப்பு படித்து, சிறப்பான பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு தகுதிக்கு ஏற்ப சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை 293-ஐ வெளியிட்டார்.

ஆனால் அந்த அரசாணை இன்றளவிலும் அமல்படுத்தப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு எங்களின் கோரிக்கையை பலமுறை முன்வைத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அரசு இந்த ஆணையை அமல்படுத்த வேண்டும். அதேபோல், கொரோனா ஊக்கத்தொகை அறிவித்தும் 4 மாதங்கள் ஆகிறது. அதுவும் இன்று வரை வழங்கவில்லை.

எனவே கொரோனாவில் பணிபுரிந்த அனைவருக்கும் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு சேவை டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் தொடங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story