மாநகர பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர்-கண்டக்டருக்கு அடி, உதை; 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


மாநகர பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர்-கண்டக்டருக்கு அடி, உதை; 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Oct 2021 11:30 AM IST (Updated: 29 Oct 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

படிக்கட்டில் நின்று பயணம் செய்ததால் நடுவழியில் இறக்கி விட்ட ஆத்திரத்தில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று டிரைவர், கண்டக்டரை அடித்து உதைத்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மாநகர பஸ்

பூந்தமல்லியில் இருந்து ஆவடி வழியாக செங்குன்றத்துக்கு நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ்(தடம் எண் 62) புறப்பட்டு சென்றது. பஸ்சை பாடி தேவர் நகரை சேர்ந்த டிரைவர் பொன் ஆதித்யா கரிகாலன் (வயது 34) ஓட்டினார். கண்டக்டரான மாதவரம் வடபெரும்பாக்கத்தை சேர்ந்த குபேரன்(43) உள்பட சில பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

ஆவடி பஸ் நிலையத்தில் அந்த பஸ்சில் ஏறிய ஒருவர், படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தார். பஸ்சில் உள்ள தானியங்கி கதவை மூடவசதியாக அவரை மேலே ஏறி வரும்படி டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் கூறினர். அதற்கு மறுத்த அவர், இருவரிடமும் வாக்குவாதம் செய்தார். இதனால் டிரைவர் நடுவழியில் பஸ்சை நிறுத்தி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது நண்பர்களை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். பின்னர் 6 பேர் கொண்ட கும்பல் திருமுல்லைவாயல் பகுதியில் சி.டி.எச். சாலையில் அந்த பஸ்சை வழிமறித்தனர்.

பஸ் படிகட்டு வழிக்கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் முன்பக்க கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று டிரைவர் பொன் ஆதித்யா கரிகாலன் மற்றும் கண்டக்டர் குபேரன் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் டிரைவருக்கு வயிற்று பகுதியிலும், கண்டக்டருக்கு இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் காயம் அடைந்த டிரைவர், கண்டக்டர் இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story