கிராம மக்கள் எதிர்ப்பு எதிரொலி: இறால் தொழிற்சாலைக்கான இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
கும்மிடிப்பூண்டி அருகே அமைய உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக அந்த பகுதியில் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சியில் இறால் பதப்படுத்தி அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுச்சூழல், விவசாயம், நீர்நிலைகள் ஆகியவை அடியோடு பாதிக்கப்படும் என புகார் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கிராம மக்களுடன் பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம் தலைமையில் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வது என்று முடிவானது. அதன்பிறகு தொழிற்சாலை தொடங்க அனுமதி அளித்த மாசு கட்டுப்பாடு வாரியம் உள்பட பல துறை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் மற்றொரு கட்ட சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
கிராம மக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில், நேற்று(வியாழன்) பொன்னேரி ஆர்.டி.ஓ.செல்வம் தலைமையில் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பூவலை ஊராட்சிக்கு நேரில் சென்று இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுமா? அதற்கான காரணிகள் எவை என்பது குறித்தும் கிராம மக்களிடம் கலந்து ஆலோசனை நடத்தினர். அப்போதும் கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை அதிகாரிகளிடம் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இறால் தொழிற்சாலை பிரச்சினை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story