கோவில்பட்டியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகள் பறிமுதல்
கோவில்பட்டியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கிய ரூ1 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் சோதனை
கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பாக்கு மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியனுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ராஜீவ்நகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
புகையிலை, பாக்கு பறிமுதல்
அப்போது அப்பகுதியிலுள்ள இ.பி. காலனியில் குடியிருக்கும் முனியசாமி மகன் முத்துராஜ் (வயது 40) என்ற வியாபாரி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 9 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்கு மற்றும் பான் மசாலா போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனை நடத்தி கொண்டிருந்த நிலையில், முத்துராஜ் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து வியாபாரிகளான சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேஷ் (40) மற்றும் புதுக்கிராமம் பெரியசாமி நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் நடராஜன் ( 30) ஆகியோரது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த புகையிலை, பாக்கு, பான்மசாலைவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 வியாபாரிகள் கைது
இவர்கள் கொடுத்த தகவலின்படி கடலையூர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 மூட்டை தடைசெய்யப் பட்ட புகையிலை, பாக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொத்தமாக நேற்று ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை, பாக்கு மற்றும் பான்மசாலாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ், நடராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story